#Madurai | டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நேற்று (ஜன.22) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்து பேசினர். அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அமைச்சரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை மகிழ்ச்சியான தகவல் வரும்" என்றார். இந்த நிலையில், அரிட்டாப்பட்டி பல்லியிர் பாதுகாப்பு மண்டல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அரிட்டாபட்டி கிராம மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.