"ராணுவ வீரா்களின் நினைவிடத்தை டிரம்ப் அவமதித்துவிட்டாா்" - #Kamala Harris
ராணுவ வீரா்களின் நினைவிடத்தை டிரம்ப் அவமதித்துவிட்டாா் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால் இருவரும் அதிரடியாக பல வாக்குறுதிகள் மாறி மாறி அளித்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 13 ராணுவ வீரா்களுக்கு அா்லிங்டனில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் டிரம்ப் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மேலும், அந்த இடத்தில் தோ்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடியோ, புகைப்படம் எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த டிரம்ப்பின் ஆதரவாளா்கள் நினைவிடத்தில் இருந்த ஊழியா்களுடன் வாக்குவாதம் செய்தனர். அதனுடன் ஊழியர்களை கீழே தள்ளிவிடவும் செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், டிரம்ப் அங்கிருந்தவா்களை நோக்கி கட்டை விரலை உயா்த்திக் காட்டி ஆதரவு திரட்டியாத தெரிகிறது.
இந்த சம்பவம் பெரும் சா்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த கமலா ஹாரிஸ், "ராணுவ வீரா்களின் நினைவிடத்தை டிரம்ப் அவமதித்துவிட்டாா். அவா் தனது அரசியல் நாடகத்தை அனைத்து இடங்களிலும் நடத்தி வருகிறாா். வீரா்களுக்கான நினைவிடத்தை தோ்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று மாகாண அரசு தடை விதித்தும், டிரம்ப் அதனை மதிக்கவில்லை. அமெரிக்க ராணுவ வீரா்களின் தியாகத்திலும் அரசியல் நடத்துகிறாா்" என்றாா்.
கமலா ஹாரிஸின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த டிரம்ப் கூறியதாவது, "உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினா். அதனால்தான் புகைப்படம் எடுக்கப்பட்டது. நான் ஏற்கெனவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறேன். அஞ்சலி செலுத்தும் இடத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய தேவை எனக்கு இல்லை."
இவ்வாறு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.