அருணாசல பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் கில்லாபுக்ரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 22 பேர் அருணாசலபிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டம் ஹயுலியாங்கில் ஒரு விடுதி கட்டுமான பணிக்காக லாரியில் சென்றுள்ளனர். இதனிடையே கடந்த 10ம் தேதிக்குள் தொழிலாளர்கள் ஹயுலியாங் சென்று இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஹயுலியாங் வராததால் அவர்களது கூட்டாளிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் காணாமல் போன தொழிலாளர்களை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புத்தேஸ்வர் தீப் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் லாரியில் வந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து ராணுவம், போலீசார், மாநிலம் பேரிடர் மீட்பு படையினர் ஹயுலியாங்- சக்லகம் சாலையின குறுகிய மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிடப்பதை கண்டறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு மீட்பு படையினர் விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் லாரியில் இருந்த புத்தேஸ்வர் தீப் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.