“பாஜவினர் வரலாற்றை மாற்ற பார்க்கிறார்கள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜகவினர் வதந்திகளை மட்டும் பரப்பாமல் வரலாறுகளை மாற்றலாம் என்று நினைக்கிறார்கள்; அவற்றை உடைக்க ஏராளமான திருச்சி சிவா நாட்டுக்கு தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவரும், கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா எழுதிய 'எதிர்பாராத திருப்பம்', 'மேடையெனும் வசீகரம்' உள்ளிட்ட ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (அக்டோபர் 5) நடைபெற்றது. புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொருளாளரும் மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "திமுக இளைஞர் அணியை கலைஞர் உருவாக்கியபோது, ஐந்து பேரை அமைப்பாளர்களாக நியமித்தார். அதில் ஒருவர் திருச்சி சிவா. மிசா என்.சிவா என்ற பெயரை திருச்சி சிவா என்று மாற்றியவர் கலைஞர். அப்போது நாங்கள் எல்லாம் 30 வயதை தொட்ட இளைஞர்களாக இருந்தோம். என்னைத் தளபதி என்று முதலில் அறிவித்தவர் திருச்சி சிவாதான்.
இன்றைக்கு 70 வயதை தொட்டும் தொய்வில்லாமல் பணியை தொடரக்கூடிய இளைஞர்களாக இருக்கிறோம். எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக, கருப்பு சிவப்பு கொடி, கலைஞர். இந்த மூன்றும் இல்லை என்றால் நாங்கள் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது. திமுகவின் முகமாக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா செயல்பட்டு வருகிறார். 526 விவாதங்களில் பங்கேற்று 790 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதனால் தான் ஆளும் தரப்பு சிவா எழுகிறார் என்றால் அச்சப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், தொழில்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக ஏழு அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கிறார். 9 தனிநபர் மசோதாக்களையும், 2 தனிநபர் தீர்மானங்களையும் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய சாதனைகளுக்கு மகுடம் வைக்கும் விதமாக திருநங்கைகள் உரிமைகள் மசோதா அமைந்திருக்கிறது. 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனை.
இன்றைக்கு சேவை துறைகளில் பணிபுரியக்கூடிய சுமார் 80 லட்சம் தொழிலாளர்களின் நிலை பற்றி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசி அதன்விளைவாக மத்திய அரசு அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கக்கூடிய திட்டங்களை வகுக்க முன்வந்திருக்கிறது. இதுதான் சிவா மூலமாக திமுக அடைந்த பெருமைகள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிவா செயல்பட்டு வருகிறார் தான் ஐஏஎஸ் ஆகமுடியவில்லை என்று சிவா ஒரு பேட்டியில் சொன்னதாக வைரமுத்து குறிப்பிட்டார். ஐஏஎஸ் பதவிக்கு ஓய்வு உண்டு, ஆனால் நீங்கள் கொள்கையை பரப்பும் திமுகவுக்கும் நமது பயணத்துக்கும் என்றைக்குமே ஓய்வில்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை முடிக்கும் போது தெரிவித்தார்.