சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆதியன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நீண்ட காலமாக தங்களுக்கு பழங்குடியினர் (ST) சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசிடம் மனுக்கள் கொடுத்து கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது.
அவர்களின் மனுக்களுக்கு பதில் வராததால் நேற்று (ஜன.28) தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆதியன் பழங்குடியின மக்கள் குழந்தைகளும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரக்குடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பழங்குடியின மக்கள், தங்களுக்கும் மற்ற மாவட்டங்களில் வசிக்கும் தங்கள் பிரிவினருக்கும் உடனடியாக பழங்குடியினர் சான்றிதழை கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
இதே போன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக ஸ்ரீவாஞ்சியம், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் ஆதியன் பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.