Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீத பேருந்துகள் இயக்கம்..?

08:45 AM Jan 09, 2024 IST | Jeni
Advertisement

ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தை தொடங்கினர்.

சென்னையில் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருவதாக மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன.

நெல்லையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலும், 95% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை மண்டல போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள 18 பணிமனைகளில் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தனியே அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 16 பணிமனைகளில் 96% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படக்கூடிய 618 பேருந்துகளில் 594 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவையில் 100% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மண்டலத்தில் வழக்கமாக 951 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சேலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 50 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சேலம் வருகை தரும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வேலைநிறுத்த அறிவிப்பால் பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காட்சியளிக்கிறது.

திருவள்ளூரில் 40 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் பணிமனையில் உள்ள பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பணிமனை மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு 50 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3,054 புறநகர் பேருந்துகளும், 758 கிராமப்புற பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, சென்னை,  கடலூர் போன்ற நகரங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடலூரில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக 78% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடலூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக 200 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 156 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 12 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 60 சதவிகித பேருந்துகளும், கரூர் பணிமனையில் இருந்து 70 சதவிகித பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் வருவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொமுச, ஏஎல்எப், அரவிந்த் கெஜ்ரிவால் யூனியன் உள்ளிட்ட சங்கத்தினர் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியூசி பணியாளர்கள் சங்கம் போன்ற சங்கங்கள் பணியை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து வழக்கமாக 65 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 35 பேருந்துகள் மட்டுமே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.

உசிலம்பட்டியில் 75 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து நாள்தோறும் காலை 7 மணி வரை 68 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், 42 பேருந்துகளே இயக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியிலும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள பணிமனை முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வரும் நிலையில், அவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Tags :
BusStrikestrikeTransportTransportStrike
Advertisement
Next Article