அண்ணா மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!
போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து ஜன.8-ம் தேதி மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்: உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து!
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதன் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தது.
எனினும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக இன்றும் (ஜன.10) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.