"அரசும், போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பிடிவாதமாக இருப்பது ஏன்?" - சென்னை உயர்நீதிமன்றம்!
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, இன்று மாலை 2.15 மணிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, நேற்று (ஜனவரி 9) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டிசம்பர் 19-ம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் போக்குவரத்திற்கும், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சுமூகமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, நேற்று காலை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது. இதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, மனு தாக்கல் நடைமுறைகளை முடிவடையும் பட்சத்தில் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருந்தனர். ஆனால் மாலை 4:45 மணி வரை மனு தாக்கல் நடைமுறைகள் முடிவடையாததால், அவசரம் கருதி விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் மாலை மீண்டும் முறையிடப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜன. 10) காலை முதல் வழக்காக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது.
அதன்படி, இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அவசியமா? அரசும், போக்குவரத்து துறையும் பிடிவாதமாக இருப்பது ஏன்? பொங்கல் பண்டிகையின் போது, இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என தலைமை நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா என அரசிடம் கேட்டு சொல்லுமாறு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.