அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற தடை!
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை இனி பணியமர்த்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருநங்கைகள் இனி ராணுவத்தில் பணியமர்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் சேவையில் உள்ள உறுப்பினர்களுக்கு பாலின மாற்றம் தொடர்புடைய நடைமுறைகளைச் செய்வதோ, எளிதாக்குவதோ நிறுத்தப்படும்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பாலின டிஸ்போரியா (ஒரு தனிநபரின் உயிரியல் பாலினத்துக்கும் அவர்கள் வெளிப்படுத்த விரும்பும் பாலின அடையாளத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் ஏற்படும் மன உளைச்சல்)
பாதிப்பு கொண்ட தனிநபர்களுக்கான அனைத்து சேர்க்கைக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாலின டிஸ்போரியா உள்ளவர்கள் தன்னார்வத்துடன் நமது நாட்டுக்கு சேவையாற்றியுள்ளனர். அவர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் ராணுவத்தை மறுசீரமைக்கும் நான்கு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டதாக அறிவித்தார். அதில் திருநங்கைகள் ராணுவத்தில் பணியமர்த்த அனுமதி இல்லை என்று உத்தரவும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அமலுக்கு வந்துள்ளது.