பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து - புதிய கேட் கீப்பர் நியமனம்!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே நேற்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது. அந்த வேன் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தனியார் பள்ளி வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த செழியன்(15), விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செழியன் (15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. இதையடுத்து விபத்து ஏற்பட்ட இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேட்கீப்பர் பங்கஜ் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து ரயில்வே காவல்துறையினர் விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தெற்கு ரயில்வே முதலில் வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே கேட்டை கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடும்போது, வேன் ஓட்டுநர் மூட வேண்டாம் என்று கூறியதாக முன்னுக்குப்பின் முரணாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, காலை 7.10 மணிக்கு ரயில் வருவது தெரிந்து 7.06 மணிக்கு கேட்டை பூட்டியதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தத்தின் காரணமாக கேட் கீப்பர் மீண்டும் திறந்ததாகவும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆனால், வேன் வந்தபோது ரயில்வே கேட் திறந்து தான் இருந்தது என்று காயமடைந்த வேன் ஓட்டுநர், மாணவன் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் விபத்து நடந்த செம்மங்குப்பம் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.