#TrainAccident | 10 மணிநேரத்தை கடந்தும் நீடிக்கும் மீட்பு பணிகள்!
பொன்னேரி அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில், இரவுமுதல் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.30 மணியளவில் விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
விபத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 30 பேர் முதலாவதாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் 40 பேர் கொண்ட குழு விரைந்தனர்.
தொடர்ந்து ராட்சத கிரேன் மூலம் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த 4 தண்டவாளங்களை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றன. ரயில் விபத்து காரணமாக சென்னை, விஜயவாடா மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. கும்மிடிப்பூண்டி மார்க்கம் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ரயிலில் இருந்த பயணிகள் பேருந்துகள் மூலம் அருகில் இருந்த தனியார் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மோப்ப நாய்கள் மூலம் ரயிலில் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என பார்க்கப்பட்டது. இரவு முதல் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என இருப்பு பாதை சீரமைக்கும் பணியில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியினை சரி செய்வதற்கு 12 மணி நேரம் கடக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், ஐந்து மணிநேரத்தில் நான்கு ரயில் பெட்டிகள் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்து பகுதியினை சரி செய்யும் பணி இன்று முழுவதும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதவி எண்கள் அறிவிப்பு
மைசூர் - தர்பங்கா விரைவு ரயில் விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. 044 25354151, 044 24354995 மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி எண்கள் மூலம் தகவல் பெறலாம்.