இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்... சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்... இணையத்தில் வைரல்!
அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்தவர் பெஞ்சமின் அவிலின். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மார்ச் 21ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தனர். குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்கிற்காக சவப்பெட்டியை கல்லறை நோக்கி எடுத்துச் சென்றனர். அப்போது, கல்லறை மேடை இடிந்து விழுந்ததில் சவப்பெட்டியுடன் சேர்ந்து பலரும் கல்லறைக்குள் விழுந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய பலருக்கும் கால்கள், முதுகு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிரிழந்த பெஞ்சமினின் மகள் இந்த விபத்தில் படுகாயமடைந்தார். அவர் சவப்பெட்டிக்கு அடியில் சிக்கி, கீழே இருந்த சேற்றில் மாட்டி மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் மகள் மாரிபெல் ரோட்ரிக்ஸ், தனது சகோதரர் மயங்கி விழுந்து சேற்றில் புதைந்துவிட்டதாகவும், தானும் மிகவும் பயந்துவிட்டதாகவும் கூறினார். அவர் இந்த சம்பவத்தை 'கொடூரமானது' என்று விவரித்தார்.
இந்த விபத்து தொடர்பான காட்டிகளை குடும்ப உறுப்பினர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்திருந்தாலும், இந்த வீடியோ தற்போது வெளியாகி வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் கல்லறை நிர்வாகம் மற்றும் இறுதிச் சடங்கு சேவை வழங்குநர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.