தோட்டத்து கம்பியை தொட்டதால் சோகம் : நீலகிரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள இடுஹட்டி பகுதியை சேர்ந்தவர் பாலன். இவருடைய மனைவி நஞ்சம்மாள் (வயது 68). இந்த நிலையில் நேற்று காலை நஞ்சம்மாள் அருகில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை தாண்டி தனது தோட்டத்திற்கு செல்ல முயற்சி செய்தபோது, தோட்டத்து வேலியில் இருந்த கேட் கம்பியை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி நஞ்சம்மாள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் தேனாடுகம்பை இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சப் -இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காட்டுப் பன்றியின் தொல்லையில் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க ரவிச்சந்திரன் தோட்டத்திற்கு வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது வீட்டுக்கு மின்சார இணைப்பு இல்லாததால் ரவிச்சந்திரனின் தோட்டத்து விவசாய மின் இணைப்பில் இருந்து, அனுமதி இல்லாமல் வீட்டுக்கு மின்சாரம் எடுத்துள்ளார்.
அவ்வாறு கொண்டு வந்த மின் ஒயரில் சேதம் ஏற்பட்டு, அந்த ஒயர் ரவிச்சந்திரன்
தோட்டத்தில் இருந்த வேலிகம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து நஞ்சம்மாள்
இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்து போலீசாரும், வருவாய்த்துறையினரும், மின்சார துறையினரும் கூடுதலாக விசாரணை நடத்தி
வருகின்றனர்