கோயம்பேடு மேம்பாலத்தில் போக்குவரத்து சீரானது! சென்னை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் கூட்டம் காரணமாக கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது போக்குவரத்து சீராகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாளை மாலை இறுதி மரியாதை நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதுமிலிருந்து அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதே போன்று திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலர் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அலையலையாய் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வடபழனி - கோயம்பேடு இடையே ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய பொதுமக்கள் கூட்டத்தை நெறிப்படுத்தும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கோயம்பேடு மேம்பாலம், பாடி மேம்பாலம், திருமங்கலம் மேம்பாலங்களில் போக்குவரத்து சீரானதாக சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.