நெல்லை அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், இது ஒரு ஆன்மீக அருவியாக கருதப்படுவதாலும் இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரி கோடை விடுமுறையொட்டி ஏராளமானோர் சுற்றுலா சென்று வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டும் கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக பலர் சுற்றுலா சென்று வந்தனர். கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு சென்றனர். இதனால் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
மேலும் பாபநாசம் வன சோதனை சாவடியில் இருந்து அகஸ்தியர் அருவி பகுதிக்கு
செல்லும் சுற்றுலாப் பயணிகள் வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மது
பாட்டில்கள், புகையிலைப் பொருட்கள் உள்ளதா எனவும் சுற்றுலா பயணிகளிடம் ஷாம்பு, சோப்பு மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளதா எனவும்
வனத்துறையினர் பரிசோதனை செய்தனர். வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகே அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.