காணும் பொங்கல் - ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் !
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில், காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தர்மபுரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
அப்போது சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கிடையே பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் தீட்டு, ஆலம்பாடி மெயின் அருவி நடைபாதை, மசாஜ் செய்யும் இடம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.