தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப் பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் பெய்த கனமழை காரணமாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (நவ.17) காலை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதையும் படியுங்கள்: புதிய சாதனை படைத்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா!
இந்நிலையில் இன்றும் அருவியில் நீர்வரத்து குறையாததையடுத்து 4வது நாளாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவியைப் பார்வையிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நீர்வரத்து மீண்டும் சீராகும் போது, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.