“பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது” - அலகாபாத் உயர் நீதிமன்ற கருத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ்!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனைகளை அதிகரிக்கும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு கருத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண்ணின் மார்பை தொடுவதோ, அல்லது அவளின் கால்சட்டை நாடாவை அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை அல்ல. மாறாக பாலியல் சீண்டல் எனக் கூறலாம் எனும் கருத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார். இது பெண்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கண்டனங்களுக்கும் வழிவகுத்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பிஆர். கவாய் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிறுமியின் மார்பகங்களை பிடிப்பது வல்லுறவு முயற்சியாகாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், உத்தரப் பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தீர்ப்பு எழுதிய நீதிபதியின் திறன் குறைபாட்டை காட்டுகிறது. ஆனால் இந்த கருத்தை தெரிவிப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த தீர்ப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிராகவும், மனிதாபிமானமற்ற அணுகுமுறையை சித்தரிப்பதாகவும் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.