முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாள் இன்று | தமிழ்நாட்டிற்கும் அவருக்குமான பந்தம் என்ன?
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 11 மாதங்களே பிரதமராக இருந்த வி.பி.சிங்கிற்கு மாநில கட்சிகள் ஏன் முக்கியத்துவம் அளிக்கின்றன? மாநில கட்சிகளுக்கு அவர் காட்டிய வழி என்ன? தமிழ்நாட்டில் அவர் சிலையை திறக்கும் அளவிற்கு தமிழ்நாட்டிற்கும் - வி.பி.சிங்கிற்கும் இடையேயான பந்தம் என்ன? இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்…
இத்தனை ஆண்டு காலம் ஒருவன் வாழ்ந்தான் என்பதைவிட இருக்கும் காலத்தில் அவன் என்ன செய்தான் என்பதே முக்கியமானது என்பார்கள். இந்த வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் தான் வி.பி.சிங். உத்தரப்பிரதேசத்தில் 1969 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக ஆட்சி அதிகார அரசியலில் அடியெடுத்து வைத்த வி.பி.சிங்கிற்கு, 1971 லேயே நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது. தனது 38 ஆவது வயதிலேயே இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சரான வி.பி.சிங், 49 ஆவது வயதில் 1980 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச முதலமைச்சரானார்.
இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு ராஜிவ் காந்தி அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங்கிற்கு, பின்னர் பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டது. காங்கிரசில் தொடர் ஏற்றங்களைப் பெற்ற வி.பி.சிங்கிற்கு போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ராஜீவ் காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் வி.பி.சிங் ராஜினாமா செய்யும் நிலையும் ஏற்பட்டது.
1987ல் மக்களிடம் நியாயம் கேட்கச் சென்ற வி.பி.சிங், அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக மாறினார். 1988-ல் ஊழல் ஒழிப்பை முன் வைத்து ஜன்மோர்ச்சா இயக்கத்தை தொடங்கிய வி.பி.சிங் பின்னர் ஜனதா தளம் என்ற கட்சியை 1988 இல் உருவாக்கினார். தேசிய அரசியலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளையும் உள்ளடக்கிய முதல் கூட்டணியாக தேசிய முன்னணியை ஏற்படுத்தி 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலை சந்தித்து வெற்றி வாகை சூடினார்.
இடதுசாரிகளையும்-பா.ஜ.க.வினரையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்து சாதனையை படைத்த வி.பி.சிங், 1989 ஆம் ஆண்டு பிரதமரானார். இந்திய அரசியலில் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியை வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாற்றிக் காட்டி, பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஆணையை பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களினால், 2.12.1989 ல் பிரதமராக பதவியேற்ற வி.பி. சிங்கின் ஆட்சி 10.11.1990 ல் கவிழ்ந்தது.
இடஒதுக்கீடு மட்டுமல்லாமல் தமிழர் தொடர்புடைய விவகாரங்களிலும் முக்கிய மைல்கல்களை ஏற்படுத்தியுள்ளார் வி.பி. சிங். காவிரி நீர் பங்கீட்டிற்கான நடுவர் மன்றத்தை அமைத்தது, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர், பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியது, ராஜீவ் காந்தியால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமைதி படையினரை நாடு திரும்பச் செய்தது, 1989ல் நடைபெற்ற தேர்தலின்போது தேசிய முன்னணியில் அங்கம் வகித்த திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லையென்றாலும், அமைச்சரவையில் இடம் வழங்கியது என முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளையும் எடுத்திருந்தார்.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விபி சிங் 2008 நவம்பர் 27ல் மறைந்தார். வி.பி. சிங்கை போற்றும் வகையில் அவர் மறைந்த நாளில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவருக்கு சிலை அமைத்து பெருமைப்படுத்தியது தமிழ்நாடு அரசு.