வாழ்வா சாவா ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை..!
உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
அந்த வகையில் நடப்பு தொடரின் 26வது போட்டியில் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியுடன், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
இதுவரை விளையாடிய 5 போட்டிகளில், 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். எனவே இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை. வெற்றி பெறும் முனைப்புடன் பாகிஸ்தான் அணி இன்று களமிறங்குகிறது.
இதையும் படியுங்கள் : இலங்கையிடம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி..!
மற்றொரு புறம் பலமான அணியாக தென்னாப்பிரிக்கா வலம் வருகிறது. நெதர்லாந்து அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவினாலும், மற்ற 4 போட்டிகள் அதிக ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு தென்னாப்பிரிக்கா முன்னேறும். வெற்றிக் கணக்கை தொடரும் முனைப்புடன் தென்னாப்பிரிக்கா களமிறங்குவதால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.