Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆன்லைன் டோக்கனை ரத்து செய்ய வேண்டும்; காளை உரிமையாளர்கள் கோரிக்கை | பின்னணி என்ன?

11:03 AM Jan 05, 2024 IST | Web Editor
Advertisement

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை மாற்றி மீண்டும் டோக்கன் முறையை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு, காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்...

ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக உலக தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.  உண்ண உணவளிக்கும் இயற்கைக்கும்,  அதற்கு உதவும் விவசாய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பண்டிகையை தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை என்றால் புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து மகிழ்வதோடு நின்றுவிடாமல்,  ஜல்லிக்கட்டு,  மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் தமிழர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கும்போதே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்காக ஏற்பாடுகள் தொடங்கிவிடும்.  வாடிவாசல் அமைத்து வண்ணம் பூசுவது,  போட்டியில் பங்கேற்க பதிவு செய்யும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை பட்டியலெடுப்பது, பாதுகாப்பிற்காக அரண்கள் அமைப்பது என காலில் சக்கரம் கட்டி ஓடுவர் விழா கமிட்டி நிர்வாகிகள்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளே உலக புகழ் பெற்றவை.  வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கும் 15ம் தேதி அவனியாபுரத்திலும்,  16ம் தேதி பாலமேட்டிலும்,  17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

போட்டிகள் தொடங்க இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில்,  போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளும்,  மாடுபிடி வீரர்களும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு தயாராகி வருகின்றனர்.  திமிலை வீரர்களிடம் பிடிகொடுக்காமல் எல்லைக்கோட்டை தாண்டிச் செல்ல காளைகளுக்கு அதன் உரிமையாளர் பிரத்தியேக பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

வாடிவாசலில் உத்வேகத்துடன் சீறி பாயவிருக்கும் காளைகளுக்கு தனி கவனம் செலுத்தி பருத்திக்கொட்டை,  புண்ணாக்கு போன்ற வழக்கமான உணவுகளுடன்,  பாதாம்,  முந்திரி, பேரிச்சம்பழம் உள்ளிட்ட புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் வழங்கி காளைகளின் உடல் நலனை பேணிக்காப்பதாக காளை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இதுதவிர காளைகளின் கொம்பை சீவி,  அவற்றிற்கு மண் குத்தும் பயிற்சி,  நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை தீவிரமாக அளித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரையைப் போலவே அதிகப்படியான வாடிவாசல்களை கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்திலும்,  ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் பொன்னமராவதி,  தச்சங்குறிச்சி,  திருக்களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் களைகட்டியுள்ளது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியும் 6ம் தேதி இம்மாவட்டத்திலுள்ள தச்சங்குறிச்சி பகுதியில்தான் நடைபெறவுள்ளது.  போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்துள்ள காளைகளை எஞ்சியுள்ள 10 நாட்களில், தயார் செய்ய தேவையான அனைத்து பணிகளிலும் காளை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காளை வளர்ப்புக்கு தேவையான தீவனங்களின் விலை இந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,  காளைகளை வளர்க்க முடியாமல் மிகுந்த இன்னலுக்குள்ளாகி இருப்பதாகவும்,  தீவனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காளை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  அதே போல தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் பதிவு முறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதால், காளை வளர்ப்பவர்களின் நலன் கருதி மீண்டும் டோக்கன் முறையை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்து கொடுப்பதை முறைபடுத்துவது,  தேர்தல் வாக்குறுதியான காளை வளர்ப்பவர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது போன்றவற்றையும் அரசு தனி கவனம் செலுத்தி செய்துகொடுக்க வேண்டும் என காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  களம் காண காளைகளும்,  அவற்றை நேருக்கு நேர் சந்திக்க மாடு பிடி வீரர்களும் மும்முரமாக தயாராகி வரும் நிலையில்,  விறுவிறுப்பு குறையாமல் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காணும் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement
Next Article