#TNRainAlert | "பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வீட்டுக்கு கொண்டு செல்லலாம்" - தமிழ்நாடு வெதர்மேன் கூறிய குட் நியூஸ்!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த14-ம் தேதி இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்து பரவலாக சென்னையில் கனமழை பெய்து வந்தது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் மழைநீரும் புகுந்தது. அதேநேரம், நேற்றைவிட இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படியுங்கள் : பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை… #INDvsNZ 1st Test இன்று தொடக்கம்!
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“சென்னை மக்களுக்கு நற்செய்தி, சிறிது நேரம் சீரான மழை தொடரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது வடக்கு நோக்கி நகர்வதால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம். இன்று சென்னைக்கு அதி கனமழை பெய்யப் போவதில்லை. சாதாரண மழையே பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு ஆந்திரம் நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது, 18 முதல் 20 தேதிகளில் சென்னையில் சமாளிக்கக்கூடிய சாதாரண மழை பெய்யும். எனவே, மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை வீட்டுக்கு கொண்டுச் செல்லலாம். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மி.மீ. மழை பதிவாகியுள்ளது” இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.