நாளை மறுநாள் வெளியாகும் #TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்?
தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் 9-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது.
சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். தொடர்ந்து குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு 8,932 காலிப்பணியிடங்களாக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குரூப் 4 முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு முன்னதாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எந்த தேதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடுவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக தேர்வாணையத்தின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளை தீபாவளிக்கு முன்னதாக, நாளை மறுதினம் (2 நாட்களுக்குள்) வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதன்முறையாக தேர்வு நடைபெற்று மூன்று மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.