டி.என்.பி.எல் கிரிக்கெட் : சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி!
TNPL கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 7 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதேபோல தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகளும் தலா ஒருமுறை வென்றுள்ளன.
இந்த நிலையில் 8வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. சேலத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கோவை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் வெளியேறினர்.
கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர்களை அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன், முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து ஆடி அணிக்கு ரன்களை சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார். இறுதியில் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் அபிஷேக் தன்வர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரஞ்சன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை அடுத்து களமிறங்கிய பெர்னாண்டோ 2 ரன்னிலும், ஜிதேந்திர குமார் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சேப்பாக்கை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.