திருவண்ணாமலை தீபத்திருவிழா - ராட்சத இயந்திரங்களை கொண்டு கோயில் கோபுரங்களை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரம்.!
திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, மாட வீதிகளில் அமைந்துள்ள கோபுரங்களை ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபம் வரும் 17 ம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சியாக நடைபெற உள்ளது. இதில் 50 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாட வீதிகளில் அமைந்துள்ள ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். கோயில் கோபுரங்களை அதிநவீன தீயணைப்பு வாகனம் மூலம் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
அண்ணாமலையார் கோவிலில் உள்ள ராஜகோபுரம், திருமஞ்சனகோபுரம், அம்மணி அம்மன் உள்ளிட்ட கோபுரங்களில் பறவைகளின் எச்சம் படிந்து மெருகு இல்லாமல் காணப்படுகிறது. இதனை தூய்மை செய்ய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள அதிநவீன இயந்திரமான உயர்வு நீட்டிப்பு ஏணியை வரவழைத்து நாள் ஒன்றுக்கு 4, 20,000 ரூபாய் வாடகை மூலம், ஒரு கோபுரம் சுத்தம் செய்ய 50000 முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை தண்ணீர் பீச்சி அடித்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.