திருவள்ளூர் | 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை திருக்கோயிலான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில் அனுதினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்
மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தெலங்கானா மாநிலம் போன்ற பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை போன்ற காரணத்தால் கடந்த வாரங்களில் அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்தனர். மேலும் 2025 ஆங்கில புத்தாண்டு அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு குவிந்தனர்.
சாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவற்றை எண்ணுவதற்கு இந்து சமய அறநிலைத்துறையிடம் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் அனுமதி பெற்றது. பிறகு உண்டியல் என்னும் பணியினை மலைக்கோயில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி முன்னிலையில் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோரது மேற்பார்வையில் உண்டியல் என்னும் பணி தொடங்கப்பட்டது. திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக ஊழியர்கள், திருக்கோயில் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர்கள் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 9 நாட்களில் உண்டியலில் 64,72,765 லட்சம் பணம், 47 கிராம் தங்கம் மற்றும் 2,975 கிராம் வெள்ளி முதலியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.