#TirupatiLaddu சர்ச்சை - நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்!
திருப்பதி லட்டு தயாரிக்க கலப்படம் செய்த நெய்யை வழங்கியதாக திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த செப். 19-ம் தேதி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்து சேனா தலைவரான சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யின் தயாரிப்பு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. டி.ஐ.ஜி. அந்தஸ்து கொண்ட கோபிநாத் ஷெட்டி, கடப்பா எஸ்.பி. ஹர்ஷவர்தன் ஆகியோர் விசாரணை குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் போலீஸ் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. “ இந்த ஆண்டு மே மாதம் 15-ந்தேதி நெய் சப்ளை செய்ய ஆர்டர் செய்யப்பட்டது. அதன்பேரில் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 12, 20, 25 மற்றும் ஜூலை மாதம் 6 மற்றும் 12- ந்தேதிகளில் 5 டேங்கர்களில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்தது. இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து தேவஸ்தானத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.அதன்பேரில் ஜூலை மாதம் 6 மற்றும் 12-ந்தேதிகளில் ஏ.ஆர். டெய்ரி சப்ளை செய்த நெய்யை திருப்பதி தேவஸ்தானம் தேசிய பால் பொருட்கள் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தோம். அந்த ஆய்வகம் நடத்திய பரிசோதனையில் நெய்யில் தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடம் காரணம் கேட்டு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. நெய்யில் கலப்படம் செய்யப்படவில்லை என ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி பதில் அளித்தது. எனவே விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்குப் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.