#ThirupatiLaddu | தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி!
திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஆந்தராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை தெலுங்கு தேசம் கட்சி, லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆய்வறிக்கையில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ,பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : Nandhan - சாதிய இழிவு தீண்டாமை குப்பைகளை எரிக்கும் புரட்சி தீக்குச்சி! சீமான் புகழாரம்!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு எதிராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்ததாவது :
"திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.