திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு பாதையில் சிறுத்தை நடமாட்டம் - பரபரப்பு #CCTV காட்சி!
திருமலைக்கு மலைப்பாதை வழியே வரும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு எச்சங்கள் கலக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்றும் குறைந்தபாடில்லை. குறிப்பாக புரட்டாசி மாதம் என்பதால், தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி - திருமலையில் குவிந்து வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாச் இரண்டாவது சனிக்கிழமையான நேற்று 71,133 பேர் தரிசனம் செய்தனர். 35,502 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
பெரும்பாலான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக நடந்து திருமலையை அடைகின்றனர். இந்நிலையில், நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாடி வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ம் தேதியன்று இரவு ஸ்ரீவாரிமெட்டு நடை பாதையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அருகே சிறுத்தை ஒன்று வந்ந்துள்ளது. இதனைக் கண்ட கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பயந்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டனர். நடைபாதையில் இருந்த இரண்டு நாய்களை அந்த சிறுத்தை துரத்த, அதிருஷ்டவசமாக அவ அங்கிருந்து தப்பிச் சென்றன. அதைதொடர்ந்து, அந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
மலைப்பாதையில் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பான, சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.