திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா கோலாகலம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 30-ம் தேதியுடன் இவ்விழா நிறைவடைகிறது.
திருவிழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் பூத வாகனம், அன்னவாகனம், தங்கமயில் வாகனம், பச்சை குதிரை வாகனம், தங்க குதிரை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதையடுத்து கோயில் ஸ்தானிய பட்டர் சுப்பிரமணியசாமி ஆக திருக்கல்யாண மண்டபத்திற்கு வருகை தந்தார். அவரிடம் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் கொடுக்கப்பட்டு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அந்த கிரீடம் சுப்பிரமணிய சுவாமிக்கு சூட்டப்பட்டு, கையில் செங்கோல் கொடுக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க, பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பட்டாபிஷேக நிகழ்வைத் தொடர்ந்து, இன்று பகல் 12 மணிக்கு திருக்கல்யாண வைபோகமும், நாளை காலை 6 மணிக்கு உச்ச நிகழ்வான தேரோட்ட நிகழ்வும் நடைபெற உள்ளது.