திருநெல்வேலி ஆணவக் கொலை - சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். இதையறிந்த அவரின் சகோதரரான சுர்ஜித்(20), அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி கே.டி.சி நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு வைத்து இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இதையடுத்து, சுர்ஜித் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கவினின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து சுர்ஜித்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையாளி சுர்ஜித் பெற்றோர்களான பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் இவர்களது பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக சுர்ஜித், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக அவரது பெற்றோர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கவின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்களிடம் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து 3 ஆவது நாளாக கவினின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவின் உறவினர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.