திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலய பந்தக்கால் விழா!
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.
சனிப்பெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிவர். ஸ்ரீ சனிபகவான் ஸ்தலத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
அவ்வாறு இந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் 05.20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கான முன்னெடுப்பு பணிகளுக்காக பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.
இந்த பந்தக்கால் முகூர்த்தம் சென்ற மாதம் 27-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் உள்துறை தரும ஆதீனத்தின் கட்டுப்பாடு எனவும், மற்றும் மற்ற அனைத்து முடிவுகளும் அரசு சார்பில் சிறப்பு அதிகாரி தருமஆதீன பிரதிநிதியை கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட வேண்டும் என 2012ல் உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து முடிவுகளும் இருதரப்பினரும் சேர்ந்து முடிவு செய்யப்பட வேண்டியது. ஆனால் இம்முறை ஆலய நிர்வாக சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீல ஸ்ரீகந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தேதி குறிப்பிட்டு, பின்னர் தம்பிரான் சுவாமிக்கு இவ்விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தருமபுர ஆதீனத்தை ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என தம்பிரான் சுவாமிகள் பந்தக்கால் முகூர்த்தத்தில் பங்கேற்கவில்லை. சுவாமிகள் பந்தக்கால் முகூர்த்தத்தில் பங்கேற்காததால் ஐந்து கிராம மக்கள் இவ்விழாவினை புறக்கணித்தனர்.
மக்கள் புறக்கணிப்பால் பந்தக்கால் முகூர்த்தம் அக்டோபர் மாதம் நடைபெறவில்லை. ஆதினத்தின் தரப்பில் வேறு தேதியில் மாற்றி அமைக்கப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஆதின நிர்வாக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைதொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் ஆதினத்துடன் ஆலோசித்து இன்று பந்தக்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.