#Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்... போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
கடந்த 7 வருடங்களாக கழுத்தில் சிக்கிய சில்வர் குடத்தின் வாயிற்பகுதியுடன் அவதிப்பட்டு வந்த நாயை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நாயின்
கழுத்துப் பகுதியில் சில்வர் குடத்தின் வாயிற் பகுதி மாட்டிக்கொண்டது. அந்த நாய்
அதனுடனே திருமயம் பகுதியில் சுற்றி திரிந்துக் கொண்டிருந்து. நாயில் கழுத்துப் பகுதியில் சிக்கி இருந்த சில்வர் குடத்தின் வாயிற் பகுதியை அகற்ற சமூக ஆர்வலர்கள் பலமுறை முயற்சி
செய்தும் முடியவில்லை.
இந்த நிலையில் திருமயம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு நாயை பிடித்தனர். பின்னர் அந்த நாய்க்கு திருமயம் கால்நடை உதவி மருத்துவர் மோகனப்பிரியா மயக்க ஊசி செலுத்தினார். பின்னர், தீயணைப்பு துறையினர் நாய் கழுத்தில் இருந்த சில்வர் குடத்தின் வாயிற் பகுதியை கட்டிங் மெஷின் மூலம் வெட்டி அகற்றினர்.
அதன்பிறகு நாய் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் துள்ளி குதித்து ஓடியது. நாயின் கழுத்தில் சிக்கிய குடத்தின் வாயிற் பகுதியை சிறு காயங்கள் கூட இல்லாமல் அகற்றி நாய்க்கு புத்துயிர் வழங்கிய தீயணைப்பு துறையினர் மற்றும் கால்நடை மருத்துவரின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.