திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!
திருப்பதியில் சாமி தரிசன வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த டிடிஎப் வாசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம்தான் ப்ராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். டிடிஎப் வாசன், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு ஏழுமலையான் தரிசனத்திற்காக வைகுண்ட மண்டபத்தில் இருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.
அறையின் கதவை திறந்து விடும், தேவஸ்தான ஊழியர் போல டிடிஎப் வாசனின் நண்பர் சென்று, காத்திருப்பு அறையின் கதவு பூட்டை திறந்து விடுவதுபோல செய்கிறார். அப்போது சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் கதவுகள் திறக்கப்படாமல் இருக்க, நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வேதனையில் மீண்டும் அமர்ந்தனர். இதனை பிராங்க் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதையும் படியுங்கள் : திமுக கூட்டணியின் வெற்றி ரகசியம் என்ன? மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திருப்பதியில் சாமியை தரிசனம் செய்வதற்காக காத்திருந்த பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ பற்றி அறிந்த தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி உரிய நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
திருப்பதி மலையில் பக்தர்கள் மன வருத்தம் அடையும் வகையில் இது போன்ற
செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அறிவித்துள்ளது.இந்நிலையில் டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் புகார் அளிக்க தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை மேற்கொண்டுள்ளது.