திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் விழா - அண்ணன் அரங்கநாதரிடம் சீர்வரிசை பெற்று சமயபுரம் திரும்பிய அம்மன்..!
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவில் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அம்மன் கோயில் திரும்பும் நிகழ்வு நடந்தது.
தைப்பூசம் என்றாலே தமிழ் கடவுளான முருகன் மற்றும் பல்வேறு தெய்வங்களுக்கும் மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கும் மாரியம்மன் தனது அண்ணனான ஸ்ரீரங்க ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் வைபவம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் ; ‘கல்விக் கொடையாளர்’ ஆயி அம்மாள், பள்ளி மாணவன் டேனியலுக்கு விருது – குடியரசு தின விழாவில் கெளரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அந்த வகையில், 11 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உற்சவர் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து தினந்தோறும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சமயபுரம் மாரியம்மன் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடம் கொள்ளிட கரையில் எழுந்தருளி சீர்வரிசை பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்காக கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளிய மாரியம்மன் நேற்று இரவு
ஸ்ரீரங்கத்தின் வடக்கு பகுதியை அடைந்து, தனது அண்ணனான ஸ்ரீரங்க நாதரிடம் சீர்வரிசைகளை பெற்று கொண்டார். இதன் பிறகு வழிநெடுகளிலும் பூஜைகளை பெற்றுக் கொண்டு சமயபுரம் புறப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து உற்சவர் மாரியம்மன் கடைவீதி, தேரடி வீதி வழியாக சமயபுரம் கோயிலை சென்றடைந்தது.