50 ஆட்டோ ஓட்டுனர்களால் போர்க்களமாக மாறிய திருச்செந்தூர்!
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்கக்கூடிய புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அங்கு வரக்கூடிய பக்தர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து சுற்றுலா நகரமாக திருச்செந்தூர் மாறி வருகிறது. அதுபோல கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பயணிகள் ஆட்டோக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் திருச்செந்தூர் பகுதிகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் வைத்து பயணிகளை ஏற்றி செல்வதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கூடிய நிலையில் தகராறு முற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களின் சண்டையை பிரித்து சமாதானம் ஏற்படுத்த முயன்றனர். இதனால் பேருந்து நிலையம் பெரும் பரபரப்புக்குள்ளானது.
இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த கோயில் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன், தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் இன்னோஸ்குமார் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆட்டோ சங்கங்கள் இல்லாமல் புதிய ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும் புகார் கூறப்பட்டது.
மேலும் சில ஆட்டோ சங்கங்களை சேர்ந்தவர்கள் மாற்று இடங்களில் வந்து பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் சமான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மோதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்துசென்றனர்.