திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் - கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி கோயிலில் ரூபாய் 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஹச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடியும், கோயில் நிர்வாகம் சார்பில் 100 கோடி பங்களிப்பில் நடைபெறும் இந்த பெருந்திட்ட பணியில் திருமண மண்டபம், கலையரங்கம், பூங்கா, அன்னதான மண்டபம், பக்தர்கள் தரிசன வரிசை, பக்தர்கள் தங்கும் விடுதிகள், ராஜகோபுரம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.
95 சதவீதம்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் தக்கார் அருள் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காலை 07-30 மணிக்கு மேல் பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கோலாகலமாக குடமுழுக்கு பந்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து பூமி பூஜை நடைபெற்று புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது பக்தர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.