"விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இங்கு என்ன தான் நடக்கிறது?"- அன்புமணி ராமதாஸ் கேள்வி
"விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேல்மா கூட்ரோட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
விளைநிலங்களை அழிக்க முயற்சிக்கிறீங்களே? உங்களுக்கு மனசாட்சி இல்லையா? இதை ஒருபோதும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. இதுதான் பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை முடிவு. 8 வழி சாலைக்காக முதலில் போராடியவன் நான், நீதிமன்றத்திலும் நான் போராடியதால் இப்பொழுது அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களுடைய நிலங்களை விட்டுவிடுங்கள். விளை நிலங்களை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை. நிலங்களுக்கு இழப்பீடாக கொடுக்கும் பணம் டாஸ்மார்க்குக்குதான் போகும். எனவே விளைநிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் அதை நாங்கள் தைரியமாக எதிர்ப்போம்.
குண்டர் சட்டம் போடப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் ஐம்பது ரூபாய், அறுபது ரூபாய் என ஒரு மூட்டைக்கு லஞ்ச வாங்குகின்றனர்.
100 ஆண்டுகளில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையோடு செயல்படக்கூடிய கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி. இது அடுத்த தலைமுறைக்காக பாடுபடக் கூடிய கட்சி. விவசாய நிலங்களை கையகபடுத்தமாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக தற்போது தலைகீழாக செயல்படுகிறது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இனி நாங்கள் விளைநிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம்.” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.