திருச்சூர் பூரம் திருவிழா தொடக்கம்... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவாகப் போற்றப்படும் திருச்சூர் பூரம், வரலாற்று சிறப்புமிக்க வடக்குநாதன் கோயிலில் இன்று தொடங்கியது. இன்று காலை கணிமங்கலம் சாஸ்தா கோயிலில் இருந்து 8 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்புடன் வடக்கு நாதர்சிவன் கோயிலுக்கு புறப்பட்டனர்.
இதையடுத்து பஞ்சவாத்தியம் உள்ளிட்ட பல்வேறு மேளங்கள் இசைக்கப்பட்டன. மிகவும் பிரபலமான இலஞ்சித்தறை மேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் அணிவகுப்பும் குடை மாற்றும் நிகழ்வும் இன்று மாலை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு பகவதி அம்மன் எழுந்தருளவுள்ளார். திருச்சூர் பூரம் திருவிழாயொட்டி வடக்குநாதர் கோயிலில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறப்பு வாய்ந்த பாரமேக்காவு பகவதி அம்மன் கோயில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் நிர்வாகத்தினர், போட்டிபோட்டு நடத்தும் யானைகளின் ஆடை, ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சி இன்று மாலை நிகழ்கிறது.