ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் - மும்பை போலீசாரிடம் சிக்கிய மர்மநபர்!
"ரத்தன் டாடாவுக்கு பாதுகாப்பை பலப்படுத்துங்கள். இல்லையெனில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்" என தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் மும்பை காவல்துறையிடம் பிடிபட்டார்.
மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், "தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள். இல்லாவிட்டால் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு ஏற்பட்ட கதிதான் (கார் விபத்தில் இறந்தார்) அவருக்கும் ஏற்படும்" என கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மும்பை போலீஸார், ரத்தன் டாடாவுக்கு பாதுகாப்பை அதிகரித்தனர்.
அதேவேளையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து தொலை தொடர்பு நிறுவனத்தின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்த நபர் புனேவில் வசிப்பவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரின் வீட்டுக்கு மும்பை போலீஸார் விரைந்தனர்.
அங்கு மிரட்டல் விடுத்த நபரின் மனைவி மட்டுமே இருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த செயலில் ஈடுபட்ட நபர் கடந்த 5 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமானதும், அவர் மன நோயால் பாதி்க்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், அவர் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்பானது கர்நாடக மாநிலத்திலிருந்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பிடிக்கும் பணியில் மும்பை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர், நிதி பிரிவில் எம்பிஏ பட்டம் மற்றும் பொறியியல் கல்வியும் பயின்றுள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு மன நோயாளி மிரட்டல் விடுத்த சம்பவம் மும்பை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.