தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!
தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்துவதாகவும் இது குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு டிஜிபி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த சில உயர் சாதி சிறுவர்களால் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. பாதிக்கப்பட்டவர் தேர்வு எழுத பேருந்தில் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அவரை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து அரிவாளால் தாக்கி, அவரது இடது கையில் விரல்களை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவரின் தந்தையும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் மனித உரிமைகள் மீறல் குறித்த கடுமையான பிரச்சினையை ஆணையம் கவனித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு டிஜிபி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
மார்ச் 12, 2025 அன்று வெளியிடப்பட்ட செய்திகளின்படி , தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளிகள் தப்பிச் சென்று, சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் குழு சிறுவனின் விரல்களை மீண்டும் இணைக்க முடிந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.