தூத்துக்குடியில் தொடரும் கனமழை - உப்பு உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் நுழைவுவாயில் என்றழைக்கப்படக்கூடிய தூத்துக்குடி மற்றும் அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதான தொழிலாக விளங்கி வருவது உப்பு உற்பத்தியாகும்.
ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்படக் கூடிய உப்பு உற்பத்தியை நம்பியே சுமார் 50,000 தொழிலாளர்கள் உள்ளனர். கடந்தாண்டு பொய்த்துப் போன பருவ மழையின் காரணமாக உப்பு உற்பத்தி மிகப் பெரிய அளவில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தாண்டும் தென்மேற்கு பருவ மழையின் போது சுமார் 95 சதவீத அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள வேப்பலோடை, வேம்பார், கோவங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் வரும் நாட்களில் உப்பு விலை உயரும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் வரையில் ஒரு உப்பு ஒரு மூடை ரூ.1500க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.2500ஆக உயர்ந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேந்தன்