தூத்துக்குடி | சொந்த மகனை மண் வெட்டியால் தாக்கிய தந்தை - கொலையாக உருவெடுத்த குடும்ப சண்டை!
தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப சண்டை காரணமாக தன் சொந்த மகனை மண் வெட்டியால் வெட்டி தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகாலில் மேல தெரு பகுதியை சேர்ந்த பிரியதரனின் மகன் பாலமுருகன் (38). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கும் அவரது தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பிரியதரனும் - பாலமுருகனும் நேற்று (டிச. 15) குடி போதையில் இருந்ததாகவும், எனவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாலமுருகன் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது தந்தை பிரியதரன் மண் வெட்டியை கொண்டு பாலமுருகனின் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடி துடித்து உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இறந்த பாலமுருகனின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தந்தை பிரியதரன் தன் மகனை கொலை செய்து விட்டு தானாகவே வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.