"இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது" - ஹாக்கி அணியின் கேப்டன் #HarmanpreetSingh
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியின் வெற்றிக்குப் பிறகு மிகவும் நன்றாக உணர்கிறோம் என இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்தார்.
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டி 1 -1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பின்னர் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 – 1 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது.
இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இதுகுறித்து பேசியதாவது, "ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியின் வெற்றிக்குப் பிறகு மிகவும் நன்றாக உணர்கிறேன். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பானது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இந்த தொடருக்கு தயாராக எங்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை." இவ்வாறு இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்தார்.