“இந்த வெற்றியை முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன்” - திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று(பிப்.05) காலை 8 மணி முதல் தபால் வாக்குகளுடன் சேர்த்து 20 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போது 19 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் சந்திரசேகர் 115375 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டிட்ட நாதக உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர் தனது வெற்றியை முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்பதாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் “இந்த வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்கிறேன். அதேபோல் இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இந்த இடைத்தேர்தலை பொறுப்பேற்று என்னை வழிநடத்தி நேரடியாக மக்களை சந்தித்துதான் ஓட்டுகளை பெற வேண்டும் என்று சொல்லி, ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலாவை உருவாக்கி மாபெரும் வெற்றியை பெற வைத்த எங்கள் மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த தொகுதியில் நிறைய பேர் என்னன்னவோ சொன்னலும் கூட, விதவிதமாக பரப்புரைகள் மேற்கொண்டாலும் சரி, திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு 46 வேட்பாளர்கள் இந்த களத்தில் நின்றாலும், திமுக 75 % வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை உதய சூரியன் சின்னம் பெற்றிருக்கிறது. இனி நான் எப்படி செயல்படப் போகிறேன் என்பதை பார்க்கத்தான் போகிறீர்கள். வாக்களித்த மக்களுக்கு நன்றி”. இவ்வாறு திமுக வேட்பாளர் சந்திரசேகர் பேசியுள்ளார்.