“கருணாநிதியின் இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி தான் தமிழ்நாட்டு குடும்பங்களின் மூத்த பிள்ளைகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரலில் காணொலி, நினைவிட திறப்பு விழாவில் ஒலிபரப்பப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கி.வீரமணி, ஜி.கே.மணி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, நினைவிடங்களை திறந்துவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரலில் ஒலிபரப்பப்பட்ட காணொலியை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கலைஞர் என்றாலே போராட்டம்தான்! அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!” என பதிவிட்டுள்ளார்.