தேர்தலில் போட்டியிடாததற்கு இதுதான் காரணம்!.. - தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு!
“மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என செல்லும் இடமெல்லாம் கேட்கிறார்கள். முதலில் உட்கார இடம் வேண்டும். அதன் பிறகு நிற்கலாம்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நங்கநல்லூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
“மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என செல்லும் இடமெல்லாம் கேட்கிறார்கள். முதலில் உட்கார இடம் வேண்டும். அதன் பிறகு நிற்கலாம். சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது மு.க. ஸ்டாலினின் இளமைக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது முதல் இப்போதுவரை அவர் சர்வாதிகாரத்தை எதிர்த்து வருகிறார். மகளிர் இலவசப் பயணம், மகளிர் உதவித் தொகைத் திட்டம் போன்றவை எளிய மக்களுக்கு உதவுகிறது.
இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தெரிவித்ததாவது..
“பாஜகவின் கற்பனைப்படி நாக்பூர் தலைநகர் ஆக வேண்டும். இந்தியா மத சார்புள்ள, ஒரே மதம் உள்ள நாடாக வேண்டும். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வேண்டும். பாடத்திட்டத்திலும், புராணமே சரித்திரமாக மாற வேண்டும். அனைத்து தொழிலும் ஒரு சிறு குழுவுக்கே போய் சேர வேண்டும். இதெல்லாம் நடந்தா இப்ப மட்டும் இல்ல, எப்பொழுதுமே நாம் எல்லோருமே தெருவில் நிற்க வேண்டும். அதை நடக்கவிடக் கூடாது. நீங்கள்தான் அதை நிகழ்த்தி காட்ட வேண்டும்” என பேசினார்.