"வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான்!" -ஆர்.எஸ் பாரதி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்த நிலையில், வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992 பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக வாக்குச்சாவடியை கைப்பற்றும் வன்முறையை அறிமுகப்படுத்தியது அதிமுகதான்.
2000 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 2300 வாக்குகள் போட்டது அதிமுக. ஆலந்தூர் நகராட்சியில் 20 பூக்களில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டுகளை அதிமுகவினர் போட்டனர். இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்தான், தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எப்படியாவது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதிமுக நடத்திய பூத் கேப்சரிங் விஷயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு திமுகவை குறைகூறுவதா?
இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் புறக்கணித்துள்ளனர். எடப்பாடி தேர்தலை புறக்கணித்துள்ளதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வாக்களிக்க மாட்டார்களா?. ஓட்டுப்போட வேண்டாம் என கட்சிக்காரர்களை கேட்டுக்கொள்ளும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா?. அதிமுகவில் யார் யாரெல்லாம் வாக்களிக்கிறார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்க உள்ளோம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தான் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. வன்னிய சமுதாயத்துக்கு 20% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.
வன்னிய பெருமக்களுக்கு கருணாநிதி செய்த நன்மையே திமுகவுக்கு வெற்றியை தேடித் தரும். திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டால் தான் உயர்வு பெற்றோம் என்பதை வன்னிய சமூக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். நாங்கள் வலுவாக உள்ளோம்" என்று கூறினார்.