“இந்த தேர்தல் எல்லா தேர்தலை விடவும் முக்கியமானது” -கமல்ஹாசன்!
இந்த தேர்தல் எல்லா தேர்தலை விடவும் முக்கியமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே போன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும்தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எல்லா தேர்தலும் முக்கியமானது தான். இந்த தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம் அதனால், எல்லோரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். இந்தியா வாழ்க! தமிழ்நாட்டு ஓங்குக,, தமிழ் வெல்க!” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.