என்றும் மவுசு குறையாத #ThirupatiLaddu | சர்ச்சைகளுக்கு இடையே 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!
திருப்பதி லட்டு தொடர்பாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தினாலும், இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையிலும், லட்டு விற்பனையிலும் எந்தவித பாதிப்பும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த செப். 19-ம் தேதி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்து சேனா தலைவரான சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யின் தயாரிப்பு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த சர்ச்சையால் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், லட்டு விற்பனையும் மந்தமடையும் என கூறப்பட்டது. ஆனால் இந்த சர்ச்சையால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையோ அல்லது விற்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கையோ சற்றும் பாதிக்காமல் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. திருப்பதி கோயிலுக்கு தினம் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை கிளம்பிய அடுத்த 4 நாட்களில் மட்டும் சுமார் 14 லட்சம் லட்டுகள் கோயிலில் விற்பனையாகியுள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப். 19-ம் தேதி 3.59 லட்சம் லட்டுகளும், செப். 20-ம் தேதி 3.17 லட்சம் லட்டுகளும், செப். 21-ம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், செப். 22-ம் தேதி 3.60 லட்சம் லட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக கோயில் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் சராசரியாக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.